திருச்சி மாநகராட்சி விரைவில் 300 சதுர கி. மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் -மேயர் அன்பழகன் தகவல்
திருச்சி மாநகராட்சியில், கடந்த, 2016-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மேயராக தி.மு.க.வை சேர்ந்த அன்பழகன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், மாநகராட்சியில் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் அன்பழகன் அறிவித்தார். அதன்படி, நேற்று காலை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர்.
மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர், எழுந்து நின்று மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர் மேயர் அன்பழகன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது.... இன்றைய தினம் பொதுமக்களிடம் குறை கேட்டு மனுக்கள் பெறப்பட்டது. முதியோர் உதவித்தொகை, பெயர் மாற்றம், வேலை வாய்ப்பு, குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் கேட்டு அதிகமாகி வருகின்றன. மாநகராட்சி கவுன்சில் கூட்டம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதில் வார்டுகளில் இருக்கும் பிரச்சினைகளை கவுன்சிலர்கள் மூலம் அறிந்து நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட் டுள்ளது. உடைந்த குப்பை தொட்டிகளை மாற்றிவிட்டு புதிய குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு நிகராக திருச்சியை மாற்ற அமைச்சர் கே.என்.நேரு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த மாநகராட்சி விரைவில் 300 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வரும். அந்த அடிப்படையில் மாநகராட்சியின் வருவாய் இன்னும் இரண்டு வருடத்தில் இருமடங்கு, மும்மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்த காரணத்தினால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மண்டல தலைவர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் சின்னச்சின்ன அடிப்படைத் தேவைகளை அவர்களே நிறைவேற்றி தருவார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO