விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கிடைக்குமா? வருடத்தின் ஒரு நாளை நம்பி வாழ்வாதாரம் - ஏக்கத்தில் சிற்பிகள்!

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கிடைக்குமா? வருடத்தின் ஒரு நாளை நம்பி வாழ்வாதாரம் - ஏக்கத்தில் சிற்பிகள்!

கொரோனா மனிதனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாய் புரட்டிப் போட்டுள்ளது. 2020 ஆரம்பமானது முதல் ஆஸ்திரேலியா காட்டுத்தீ, கொரோனா, விமான விபத்து, தற்போது வெள்ளமென இந்த வருடத்தின் 8 மாதங்களை கடினமாக கடந்து வந்து கொண்டிருக்கிறோம். மீதி உள்ள நான்கு மாதங்களை எப்படி கடக்க போகிறோம் என்ற அச்சத்தில் நாட்கள் நகருகிறது.

தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்து செல்வது, கோயில்கள் திறக்கப்படாத நிலை என பண்டிகைகளும் திருவிழாக்களும் கலையிழக்க செய்துவிட்டது இந்த கொரோனா! நாடு முழுவதும் வருகின்ற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுமா என்ற சந்தேகத்தில் சிற்பிகளின் வாழ்வாதாரம் என்பது ஒரு முழுமையான கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சிற்பி ராஜா

திருச்சி திருவரம்பூர் மலைக்கோயில் பகுதியில் இருப்பவர் சிற்பி ராஜா. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமாக, கண் கவரக்கூடிய வகைகளில் விநாயகர் சிலைகளை செய்து வைத்துள்ளார். இதுகுறித்து சிற்பி ராஜாவிடம் பேசினோம்… வருடம் முழுவதுமே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் ஒரு நாளை நம்பி தான் எங்களுடைய வாழ்க்கை இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எப்போதும் 5 முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகளை செய்வோம். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக 3 முதல் 5 அடி மட்டுமே செய்து வருகிறோம். கடந்த ஆண்டு 200 முதல் 5,000 ரூபாய் வரை விநாயகர் சிலைகள் விற்கபட்டது.

Advertisement

ஆனால் இந்த வருடம் அதுவும் கேள்விக்குறியாக உள்ளது. வருடாவருடம் 200 முதல் 400 விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்வோம். ஆனால் இந்த வருடம் வெறும் 60 சிலைகள் மட்டுமே தற்போது செய்துள்ளோம். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள் களிமண் மூலம் செய்யப்பட்டு ஆற்றில் கரைக்க படும்போது நீரில் உயிர் வாழும் உயிரினங்களுக்கு உணவாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது".

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து இரண்டு சிற்பிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.எங்களுக்கும் இந்த நிலைமை வராமல் இருக்க எங்களது வாழ்வாதாரத்தை காக்க விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினாலே போதும். விநாயகர் சதுர்த்தியை விழாவாக பார்க்காமல் எங்களுடைய வாழ்வாதாரமாக பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்கிறார் சிற்பி ராஜா.

Advertisement