திருச்சி விமான நிலையத்தில் இருந்து இரண்டு புதிய விமான சேவைகள் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இரண்டு  புதிய விமான சேவைகள் தொடக்கம்

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி விமான நிலைய மேம்பாடு, விமான போக்குவரத்து சேவை, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் இரயில்வே துறை என திருச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நல்வாழ்வுக்காக உரிய நேரத்தையும் தனி கவனத்தையும் ஒதுக்கி செயல்பட்டு வருகிறேன். 

அதன்படி, கடந்த 14.02.2025 அன்று டெல்லியில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து சேவை நிறுவன அதிகாரிகளை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து, திருச்சிக்கு உள்நாட்டு போக்குவரத்து தொடர்பாக நான் கேட்டிருந்த விமான சேவைகளில் ஒன்றான, திருச்சி - மும்பை நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ள அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதுபோல, திருச்சி - யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை தொடங்கப்படவுள்ள அறிவிப்பை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.இந்த இரண்டு புதிய விமான போக்குவரத்து சேவையும் எதிர்வரும் மார்ச் 30ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கும் என்றும், அதற்குரிய முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியையும் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மக்கள் தொண்டனாக மகிழ்கிறேன். 

திருச்சி - யாழ்ப்பாணம் விமான போக்குவரத்து ஈழத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், தாயகத் தமிழர்களின் வியாபார முன்னேற்றத்திற்கும், இருபுறத் தமிழர்களுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு மேம்படவும், இந்த சேவை  முக்கியமான ஒத்துழைப்பாக அமையும்.அதுபோல, திருச்சியை இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையோடு இணைக்கும் இந்த திருச்சி - மும்பை புதிய விமான போக்குவரத்து பலதொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும். மேலும், மும்பையிலிருந்து பல வெளிநாட்டு விமானங்கள் அதிகாலையில் புறப்படுவதால் அதை இணைக்கும் படி இந்த திருச்சி - மும்பை விமான சேவை நள்ளிரவு பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல இன்னும் பல உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும், இண்டிகோ நிறுவனமும் தொடர்ந்து நமது திருச்சிக்கு வழங்கும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதற்கான எனது முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன். அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும்படி நமது திருச்சி தொகுதி வளர வேண்டும் என்பதே என் ஒரே இலக்கு. அதை நோக்கியே எனது பயணம் தொடரும். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய  

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision