திருச்சியில் கிராவல் மண் அள்ளிய  4 பேர் கைது - லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

திருச்சியில் கிராவல் மண் அள்ளிய  4 பேர் கைது - லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோலார்பட்டி கிராமத்தை ஒட்டிய கோரையாற்று பகுதியில் மணல் மற்றும் அப்பகுதியில் உள்ள குளங்களில் கிராவல் மண் ஆகியவற்றை அனுமதியின்றி இரவு நேரங்களில் லாரியில் அள்ளி கடத்திச் செல்லப்படுவதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் சென்ற வண்ணம் இருந்தது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவுப்படி திருவரம்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிவேல் தீவிர கண்காணிப்பு செய்தனர். இன்று அதிகாலை கோலார்பட்டி அருகே உள்ள குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் கிராவல் வகை மண் அள்ளிகொண்டிருந்ததை பார்த்த போலீசார் அங்கு சென்று கிராவல் மண்ணுடன் நின்றிருந்த 3 டிப்பர் லாரிகள் மற்றும் மண் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய லாரி டிரைவர்கள் மேலபஞ்சப்பூர் மகாலிங்கம், ராமு, கீழபஞ்சப்பூர் கருப்பையா, மற்றும் பொக்லைன் எந்திரத்தின் டிரைவர் மேக்குடி மருதுபாண்டி, ஆகிய 4 பேரையும் கைது செய்து  திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் வாகனங்களின் உரிமையாளர்கள் கோடீஸ்வரன் , வடிவேல் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO