சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்!! இவர்கள் நம்ம திருச்சி விளையாட்டு பத்திரிகையாளர்கள்!!

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் விளையாட்டு செய்திகள் என்னும் பக்கத்தை அலங்கரிப்பவர்கள் இவர்கள்தான்! கண்ணால் காண்பதை எழுத்துக்களாலும் வார்த்தைகளாலும் வடிவமைத்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் திறமை படைத்தவர்கள் இவர்கள்! இன்று உலக அளவில் சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1924ஆம் ஆண்டு இதே தேதியில் இன்டர்நேஷனல் ஸ்போட்ஸ் அசோஷியேஷன் என்ற அமைப்பு விளையாட்டு பத்திரிக்கையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.ஆரம்பிக்கும்போது இந்த அமைப்பில் 29 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தாலும் இன்றைக்கு 150க்கும் மேற்பட்ட நாடுகள் உலகம் முழுக்க 9000க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இதில் இணைந்துள்ளனர்.
நம்முடைய ஊரில் வரும் செய்தித்தாட்களில் விளையாட்டு செய்திகளை நேரில் பார்ப்பது போன்ற ரசனையுடன் அழகுற வடிவமைக்கும் திருச்சி விளையாட்டு பத்திரிக்கையாளர்களை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!

பத்திரிக்கையாளர் சுப்புராமன்
உலக அளவில் நடக்கும் விளையாட்டு செய்திகளை நம்முடைய உள்ளூர் மக்களுக்காக அழகுற வடிவமைக்கும் திருச்சி தினமலர் விளையாட்டு செய்தி பத்திரிக்கையாளர் சுப்புராமனிடம் பேசினோம்… விளையாட்டு பத்திரிக்கையாளர் என்பவர் விளையாட்டு வீரனைப் போல எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். விளையாட்டு செய்திகளை எழுதுபவர் ஒரு விளையாட்டு வீரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைத்து விளையாட்டுகளைப் பற்றியும் தெரிந்த ஒரு நபராக இருக்க வேண்டும்.விளையாட்டைப் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வந்தால் அவற்றை உடனே எடுத்துக்கொள்ளாமல் அதனுடைய நம்பகத்தன்மையுடன் முழு விபரங்களையும் தகவல்களையும் சேகரித்து உண்மையானதா என்பதை உறுதி செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம்முடைய உள்ளூர் விளையாட்டு வாசிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து அவர்களுடைய திறமையை எழுதி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த கொரோனா காலகட்டத்தில் விளையாட்டுக்கள் நடப்பதில்லை. நேற்றிலிருந்து ஸ்பெயின் போன்ற நாடுகளில் விளையாட்டுகளை தொடங்கியுள்ளனர். எனவே செய்தித்தாளில் ஒரு பக்கம் கொடுக்கும் விளையாட்டு செய்திகளை மக்களுக்கு ரசனையுடன் கொடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது" என்கிறார் சுப்புராமன்.

திருச்சியின் மற்றொரு விளையாட்டு செய்தி பத்திரிக்கையாளர்களிடம் பேசினோம்… அவர் கூறுகையில் பொதுவாக இந்தக் கொரோனா காலகட்டத்தில் விளையாட்டு செய்திகளை பொருத்தவரை தற்போது ஒலிம்பிக்கிற்கு தயாராகும் விளையாட்டு வீரர்களை பற்றிய சிறப்பு தொகுப்புகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளையும் முயற்சிகளையும் சேர்த்து கட்டுரையாக வெளியிடுகிறோம். என்றார்

உலக அளவில் நடக்கும் பல விளையாட்டுகளை நம் கண்முன்னே எழுத்துக்களாலும் காட்சிகளாலும் வடிவமைக்கும் விளையாட்டு பத்திரிகையாளர்களுக்கான இந்த தினத்தில் இவர்களைப் பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறது திருச்சி விஷன் குழுமம்.