திமுக - பாஜக மோதல் போலீஸ் குவிப்பு - இரவில் பரபரப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-க்கான வாக்குபதிவு நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற திமுக மற்றும் அதிமுக 8 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சி 1 தொகுதியில் போட்டியிட்டது. இந்நிலையில் பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்திருந்தது. ஆனால் அதையும் மீறி சில வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.
இதன் ஒருபகுதியாக திருச்சி ஹீபர் சாலையில் உள்ள தனியார் பள்ளி வாக்குசாவடியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக 1 மணி நேரம் வாக்குபதிவு தாமதமானது. பின்னர் மாற்று வாக்குபதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இரவு 7 மணிக்கு வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு வாக்குபதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணி தொடங்கியது. அப்போது திமுகவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூடுதலாக 1 மணி நேரம் வாக்குபதிவு நடத்த வேண்டும் என வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கூறினர். இதற்கு பாஜகவைச் சேர்ந்த முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக, பாஜக முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் வாக்குச்சாவடியில் இருந்த திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப நீதிமன்றம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார். அப்போது அவரை தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகி திமுக நிர்வாகியை தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருகட்சியைச் சேர்ந்தவர்கள் கூடியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த 48வது வட்ட துணை செயலாளர் கருப்பையாவிற்கும், பாஜக மாநகர இளைஞரணி தலைவர் கெளதமிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
இதுப்பற்றி தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர் பவன்குமார் , அதிரடி படை போலீசார் இரு கட்சியினரை சமாதானம் செய்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருகட்சியை சேர்ந்தவர்கள் ரோட்டில் சண்டை போட்டு கொண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr