உடையும் அபாயத்தில் உள்ள பங்குனி அணைக்கட்டு - நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித்துறை

உடையும் அபாயத்தில் உள்ள பங்குனி அணைக்கட்டு - நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித்துறை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பங்குனி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள அணைக்கட்டு உடையும் அபாயத்தில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் தான் அணை உடையும் நிலையில் உள்ளதென அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

லால்குடி அருகேயுள்ள திருமங்கலம் ஊராட்சியில் உள்ள பங்குனி ஆற்றின் குறுகே கட்டப்பட்ட அணை திருமங்கலம் பங்குனி அணைக்கட்டு. இந்த பங்குனி ஆறு திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றிலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் இடது கரையில் பங்குனி வாய்கால் தலைப்பு உருவாகிறது. இந்த பங்குனி ஆற்றில் வரும் தண்ணீர் முசிறி வடகரை வாய்க்கால் வடிகால் நீர் மற்றும் கொல்லிமலை மழை தண்ணீர் அய்யாற்றில் கலந்தும், பெருவளை வாய்க்கால் வடிகால் தண்ணீர் ஆகியவைகள் இந்த பங்குனி வாய்க்காலில் கலக்கிறது.

இந்த பங்குனி ஆற்றில் வரும் தண்ணீர்கள் பல்வேறு வாய்க்கால்களிலிருந்து வீணாக வெளியேறும் வடிகால் தண்ணீர் தான் பங்குனி ஆறாக விளங்குகிறது. இந்த பங்குனி ஆறு திருச்சி முக்கொம்பு காவிரி மேலணை வாத்தலையிலிருந்து, சிறுகாம்பூர், பாச்சூர், அத்தானி, வாளாடி உள்ளிட்ட கிராமங்களை கடந்து லால்குடி அருகேயுள்ள திருமங்கலம் அணைக் கட்டு வரை சுமார் 17 மைல் தூரம் வரும் ஆறு மேலபங்குனி ஆறு எனவும், திருமங்கலம் அணைக்கட்டிலிருந்து அகலங்கநல்லூர்,  பூவாளர், பின்னவாசல், காட்டூர், கொத்தமங்கலம், செம்பரை, மேட்டுப்பட்டி ஆலங்குடிமகாஜானம் ஏரி வரை சுமார்  8 மைல் தூரம் செல்லும் ஆறு கீழ்பங்குனியாக விளங்குகிறது.

மேல் பங்குனியில் பல்வேறு நீர்த்தேக்க கலிங்குகள் இருந்தாலும் அவைகள் விவசாய நிலங்களுக்கு பாசன ஆறாக செயல்படவில்லை. கடந்த 1941 ம் ஆண்டு கட்டப்பட்ட திருமங்கலம் அணைக்கட்டு பகுதியிலிருந்து பூவாளர், பின்னவாசல், காட்டூர் உள்ளிட்ட 15 திற்கும் மேற்பட்ட கிராம பகுதியில் உள்ள சுமார் 6 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விவசாய நஞ்சை நிலங்களுக்கு பாசன ஆறாக இந்த கீழ்பங்குனிஆறு விளங்குகிறது.

இந்த திருமங்கலம் பங்குனி அணைக்கட்டு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதனை சீரமைக்க வேண்டி அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கைகளும், புகார் மனுக்களும் கொடுத்த எவ்வித நடவடிக்கைகள் இல்லை. இந்த திருமங்கலம் பங்குனி அணை உடைந்தால் சுமார் ஆறாயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்களுக்கான தண்ணீர் கேள்விக்குறியாகத் தான் இருக்கும். அதே வேலையில் அணைக் கட்டு உடைந்தால் தண்ணீர்கள் அனைத்தும் கூழையாற்றில் சென்று எவ்வித பயனும் இன்றி செங்கரையூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தான் கலக்கும் நிலை ஏற்படும்.

எனவே  பங்குனி ஆற்றினை தூர்வாருவதில் தான் மெத்தனம் காட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், துருப்பிடித்து உள்ள இரும்பு மதகுகளையோ, இடிந்து விழும் நிலையில் உள்ள அணைக்கட்டினை தற்காலிகமாக பராமரித்து பாதுக்காக்க வேண்டும். இல்லையெனில் இந்த அணைக்கட்டு இடிந்து விழுந்தால் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனத்திற்கு தண்ணீரின்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn