நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் - திருச்சியில் இயற்கை விவசாயத்தில் அசத்தும் பட்டதாரி பெண்
திருச்சி மணப்பாறையில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி, தான் பணியாற்றிய மென்பொருள் துறை பணியை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் செய்வதோடு, இயற்கை உரங்களை தயாரித்து இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு விற்பனை செய்கிறார். இயற்கை உரம் பயன்படுத்தி மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார் சித்ராதேவி.
இதுக்குறித்து சித்ராதேவி கூறுகையில்.. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் நான். சிறு வயதிலிருந்தே இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. வீட்டில் முதல் பட்டதாரி பெண், மென்பொருள் துறையை தேர்ந்தெடுத்தேன். வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததால் மென்பொருள் துறையை தேர்வு செய்தேன்.
இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. திருமணத்திற்குப் பின்பு துபாய் செல்லும் சூழல் ஏற்பட்டபோது, பாலைவனத்தில் கூட விவசாயம் செய்வதை பார்த்து வியந்தேன் அப்போது தான் இன்னும் ஆணித்தரமாக நம் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டிய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. கல்வி அறிவோடு அனுபவ அறிவு பெற்றவர்களிடம் கற்றுக்கொள்ளலாம் என கிராமங்களுக்கு சென்று இயற்கை விவசாயம் செய்பவர்களிடமிருந்து இயற்கை விவசாயம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டேன்.
அதன் பின்னர் பசுமை இல்லம் என்ற பெயரில் இயற்கை உரங்கள் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யத் தொடங்கினோம். அதுமட்டுமின்றி நாட்டு ரக காய்கறி விதைகளை இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கும் மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கும் விற்பனை செய்து வருகிறோம். மாடித் தோட்டம் அமைப்பதற்கான இயற்கை உரம், மண்புழு உரம், பஞ்சகாவியா, மூலிகை பூச்சி விரட்டி, தேமோர் கரைசல் போன்றவற்றை விற்பனை செய்கிறோம்.
பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இயற்கை உரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், விதைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும், நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். வேளாண் அலுவலகம் மூலமாகவும் விவசாயிகளுக்கு தேவை இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
இயற்கை விவசாயம் குறித்த தெளிவை மாணவ பருவத்தில் இருப்பவர்களிடம் விதைத்து விட்டால் வருங்காலத்தில் நல்லதொரு இளைஞர்களும் விவசாயத்தை காக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே அவர்களிடம் இயற்கை விவசாயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் கனவு என்கிறார் சித்ராதேவி.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn